வாழைச்சேனை, ஓட்டமாவடியிலும் பயணக்கட்டுப்பாடு தளர்வு : பொலிஸார் களத்தில்
வாழைச்சேனை, ஓட்டமாவடியிலும் பயணக்கட்டுப்பாடு தளர்வு : பொலிஸார் களத்தில்
எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு இன்று செவ்வாய்க்கிழமை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஒன்றுகூடுவதையும், தேவையின்றி வெளிச் செல்வதையும் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பிரிவினர் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் இராணுவத்தினர் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் நின்று வீதிகளில் தேவையின்றி வரும் மக்களை சோதனைச்செய்து வீட்டுக்குத் திருப்பியனுப்பி வைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
அத்தோடு, வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வதாக இருந்தால் தூர இடங்களுக்குச் செல்லாமல் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளுக்குச்சென்று பொருட்கொள்வனவு செய்யுமாறு பொலிஸாரினால் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகள் தங்களது சேவைகளைப் பெறும் நபர்கள் சமூக இடைவெளியைப்பேணி சுகாதார விதிமுறைகளின் படி தங்களது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பாதுகாப்புப் பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதைக் காண முடிகின்றது.
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர அனைத்து வர்த்தக நிலையங்கள் மூடிக்காணப்படுகின்றது.
Comments
Post a Comment