பங்காளிகளின் பற்களைப் பிடுங்க மந்திராலோசனை..
பங்காளிகளின் பற்களைப் பிடுங்க மந்திராலோசனை..
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும். அதன் பங்காளிக் கட்சிகள்
சிலவற்றுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகள் நீண்டு கொண்டே செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்காளிகள், தாம் கொண்டிருக்கும். நிலைப்பாட்டில் உடும்புப்பிடியாக இருப்பதால், மாற்று வழியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆலோசித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
அதன் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, தேசிய பட்டியலின் ஊடாக, பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்குவதற்குத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறிய விடுமுறையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் (24) நாடு திரும்பினார்.
அவர், ஜூலை 6ஆம் திகதியன்று தேசியப் பட்டியல் எம்.பியாக பதவியேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசிலை எம்.பியாக்குவதற்காக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது.
அதன்பின்னர், ஜூலை மாதத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாகவும் அதில் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் என்றும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
உத்தியோகபூர்வமற்ற இந்த அறிவிப்புகள் வெளியானமையால்,
கொழும்பு அரசியலில் ஓர் அதிர்வு தென்படுகின்றது. அரசாங்கத்தின் பிரதான
பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும், பசில் ராஜபக்ஷ பங்கேற்றிருந்த முக்கிய சந்திப்புகளை கடந்த காலங்களில் புறக்கணித்திருந்தனர்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு, தலைவர் அல்லாத ஒருவர் அழைக்கப்பட்டுள்ளமையை அடுத்தே அவ்வாறான கூட்டங்களை புறக்கணித்ததாக பகிரங்கமாகவே அவ்விருவரும் தெரிவித்திருந்தனர்.
அவ்விருவரும் பகிஷ்கரித்த கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்த அவ்வாறான கூட்டங்களில் தலைமைதாங்கும் குழுவுடன் பசில் ராஜபக்ஷவும் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த பொஸ்பரேட் நிறுவனம், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கீழுள்ள கமத்தொழில் அமைச்சின் கீழ், எவ்விதமான முன்னறிவித்தலும் இன்றி கொண்டு செல்லப்பட்டது.
அதுதொடர்பிலும் ஏனைய பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க, ஜூலை
மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும் அமைச்சரவை மாற்றத்தின் போது, முழுமையான அமைச்சரவை மாற்றமொன்றும் இடம்பெறலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெறுமாயின், முக்கிய அமைச்சுகளின் பொறுப்புகள்
அபகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுவதாகவும் அறியமுடிகின்றது.
அதில், அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில் ஆகியோரின் கீழிருக்கும் அமைச்சுக்கள் அல்லது நிறுவனங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான மாற்றங்கள் எல்லாமே அடுத்தடுத்து முகங்கொடுக்கவேண்டிய தேர்தலைகளை அடிப்படையாக வைத்து காய்களை நகர்த்துவதற்கான ஆரம்பகட்டமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றுடன் கொழும்பு அரசியலை அதிரச் செய்வதற்கான இன்னும் சில அதிரடியான செயற்பாடுகள் அடுத்த வாரத்துக்குள் இடம்பெறலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Tm
Comments
Post a Comment