E-8 விசா பிரிவின் கீழ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த நபர் அதிரடியாக கைது !
E-8 விசா பிரிவின் கீழ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த நபர் அதிரடியாக கைது !
தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிநபர்களிடம் 3 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த நபரொருவர் குருநாகல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மீது நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்ற உத்தரவுகளைத் தவிர்க்கும் நபர் என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் முகாமையாளருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர், E-7 மற்றும் E-8 விசா பிரிவுகளின் கீழ் வேலைகள் வழங்குவதாகக் கூறி பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகி இருந்த போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு எதிராக காலி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், அன்று மாலையே அவரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபரை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, சந்தேக நபருக்கு எதிரான மேலும் 3 முறைப்பாடுகளுக்கு அமைவாக வழக்குத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் E-8 விசா பிரிவில் வேலைகளை வழங்க எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஒப்புதல் அளிக்கப்படாததால், அத்தகைய வேலைகளை வழங்குவதாகக் கூறி பணம் கேட்கும் எவருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு பணம் வசூலிக்கும் நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், பணியகத்தின் 24 மணி நேர தகவல் நிலையத்தின் துரித இலக்கமான 1989 மற்றும் பணியகத்தின் விடேட புலனாய்வுப் பிரிவு தொலைபேசி எண் 0112 864241 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
Comments
Post a Comment