அமெரிக்க வரி விவகாரம் : இலங்கை குழு செவ்வாய் வொஷிங்டன் செல்கிறது

 

அமெரிக்க வரி விவகாரம் : இலங்கை குழு செவ்வாய் வொஷிங்டன் செல்கிறது


அமெரிக்க ஜனாதிபதி டொனல் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரி குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பிரதிநிதிகள் குழு நாளை மறுநாள் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுக்களின் போது வரிகளைக் குறைத்தல் மற்றும் இறக்குமதியை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளது.

எவ்வாறாயினும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக தினைக்களத்தின் பணிப்பாளர் எமிலி ஆஷ்பி மற்றும் உதவி பணிப்பாளர் பிரெண்டன் லிஞ்ச் ஆகியோருடன் இலங்கை பிரதிநிதிகள் கடந்த வாரம் மெய்நிகர் ஊடான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இதில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் அடிப்படையிலேயே இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர்.

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான பரிந்துரைகளைத் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதி இலக்குகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அமெரிக்காவிற்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை டொனல் டிரம்ப் ஆரம்பத்தில் விதித்திருந்தார். 64 சதவீத ஆடையுற்பத்திகளை உள்ளடக்கிய இவ்வேற்றுமதிகள் 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியைக் கொண்டிருந்தன. எனவே, அமெரிக்காவின் புதிய வரி விதிப்பினால் இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறையானது பாரிய தாக்கத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்படும் பரஸ்பர வரிகள், ஆடைகளுக்கான அமெரிக்காவின் ஒட்டுமொத்த கேள்வியை குறைக்கக்கூடும். இதேவேளை, அமெரிக்காவிற்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதி அண்ணளவாக 20 சதவீதம் (ஐக்கிய அமெரிக்க டொலர் 300 மில்லியனுக்கும் அதிகமாக) குறையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !