கிழக்கு மாகாண அண்ணாவிமார்களுக்கான செயலமர்வு - கல்குடா சார்பாக ஏ.எல்.ஏ.கபூர் பங்கேற்பு
கிழக்கு மாகாண பொல்லடி அண்ணாவிமார்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வும் அனுபவப்பகிர்வு நிகழ்வும் நேற்று 30.03.2021ம் திகதி செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. நவனீதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல அண்ணாவிமார் கலந்து கொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் கல்குடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் வளர்ந்து வரும் இளம் தலைமுறை அண்ணாவியுமான ஏ.எல்.ஏ.கபூர் கலந்து கொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், மருவி வரும் இஸ்லாமிய பாரம்பரிய கலைகள் அழிந்து விடாமல் இதனை நான் பயில காரணமாக இருந்தவர் ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மறைந்த அண்ணாவியார் ஜமால்தீன் அப்பா அவர்களாவார். அவரை இந்த இடத்தில் பெருமையுடன் நன்றி கூறுகிறேன்.
அத்தோடு, இக்கலையினை நான் பயில உறுதுணையாக இருந்த நண்பர்கள் நஸீர், மன்சூர் மற்றும் இக்கலையோடு ஒன்றித்து வெவ்வேறு கலைகளிலும் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகமளித்த வஹாப்தீன் மாஸ்டர், பூமைதீன் மாஸ்டர் ஆகியோருக்கும் இந்த வாய்ப்பினைப் பெற்றுத்தந்த கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மது (MA) ஆகியோருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு, எமது பாரம்பரிய இஸ்லாமிய கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனும் நோக்கில் தன்னலான முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், அகரம் கல்வி நிலையத்தில் ஓரங்கமாக இளந்தலைமுறையினர் மத்தியில் இதனைப் பயிற்றுவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கலை, கலாசாரங்களை மேம்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில், திணைக்களத்தின் ஏனைய பணிப்பளர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment