15 வயது சிறுமியை இன்டர்நெட் ஊடாக கொள்வனவு செய்த சம்பவத்தில் 17 பேர் கைது. #இலங்கை
கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக
பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குறித்த சிறுமியின் தாய், சிறுமியை முதன்முதலில் விற்பனை செய்தவருடன் தகாத முறையில் உறவுகளை பேணும் பெண்ணொருவர், முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், சிறுமி தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றியவர் உள்ளிட்டோர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய மேலும் 20 பேரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
குறித்த பிரதான சந்தேகநபர், கல்கிசையில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து இணையத்தளத்தில் சிறுமியின் நிழற்படத்தை பிரசுரித்து பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட 35 வயதான குறித்த சந்தேகநபர், மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment