இன மதம் கடந்த அரசியலில் அஷ்ரஃபும் மங்களவும்..

 இன மதம் கடந்த அரசியலில் அஷ்ரஃபும் மங்களவும்..

 


'அனைத்து இலங்கையருக்குமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும்

 தூரநோக்கில் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஆழமான அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தார்.



அவர் முஸ்லிம்களின் குரலாக மட்டுமன்றி, தமிழர்களின் பிரச்சினைகள் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றியெல்லாம் பேசினார். அனைத்து சமூகங்களினதும் மனக் கிடைக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார்'



அஷ்ரஃப் ஒருமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், 'சிறுபான்மை இனங்கள் தங்களது மனக்குறைகள் இன்னும் செவிமடுக்கப்படவில்லை அவற்றுக்கு பரிகாரம் அளிக்கப்படவில்லை என்று கருதும் நிலைமைக்கு நாம் இடமளித்துக் கொண்டிருக்கும் காலம்வரைக்கும் இலங்கையராக ஒருமித்துச் சிந்திப்பதற்கும் தேசிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கும் எங்களால் முடியாமல் போகும்' என்று குறிப்பிட்டிருந்ததை இந்த இடத்தில் நினைவுகூருகின்றேன்'...



அரசியல் தலைவரான எம்.எச்.எம். அஷ்ரஃப் மரணித்து பல வருடங்களுக்குப் பிறகு அவரது மிக நெருங்கிய அரசியல் சகாவான மங்கள சமரவீர அஷ்ரஃப்பற்றி எழுதிய நினைவுக் குறிப்புதான் இது!




ஆனால், இன்று இருவரும் இல்லை. இனங்களையும் பேதங்களையும் கடந்து சிந்திக்கின்ற சமூகங்கள் இவர்களை இழந்து நிற்கின்றோம்.

சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் 'கிங்மேக்கர்களாக' மாத்தறையைச் சேர்ந்த மங்கள பின்சிறி சமரவீரவும் கிழக்கைச் சேர்;ந்த எம்.எச்.எம். அஷ்ரஃபும் இருந்தனர். அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகும் அரசியலில் அதே வகிபாகத்தை மங்கள கொண்டிருந்தார்.

ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா  2004ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது, சுதந்திரக் கட்சித் தலைவராக்கியது 2005 தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியது ஆகியவற்றுக்கு மங்கள பிரதான காரணியாக இருந்தார் என்று அப்போதே அரசியல் அரங்கில் பேசப்பட்டது.




ராஜபக்சவின் 2010ஆட்சியிலும் முக்கிய பங்காற்றினார். 2015 மைத்திரி-ரணில் ஆட்சிக்குக்கான வியூகங்கள் வகுத்தார்.



கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடாதிருந்த மங்கள> கடைசியில் கொரோனாவிடம் தோற்றுப் போனார். 

அவர் மறைந்த பிறகு இன்று முழு நாடுமே ஒப்பாரி வைக்கின்றது. சிங்கள மக்கள் மட்டுமன்றி சிறுபான்மை மக்களும் மங்களவை நன்றியுடன் நினைவுகூருகின்றனர். அவரது இழப்பை இனி ஈடுசெய்யவே முடியாது என்று சொல்கின்றோம்.




 அதுமட்டுமன்றி வெளிநாட்டு ராஜதந்திரிகள் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியவை. 

மிக அண்மைக்காலத்தில் எந்தவொரு அரசியல்வாதியையும் முழு நாட்டு மக்களும் இந்தளவுக்கு கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. அப்படியென்றால்> மங்கள சமரவீர எந்த விதத்தில் வித்தியாசப்படுகின்றார்?



 அவர் அமைச்சராக இருந்தார் 30 வருடம் அரசியல்வாதியாக உலா வந்தார் என்பதால் மட்டுந்தானா? நிச்சயமாக இல்லை. 

ஏனெனில் மங்கள என்பவர் மாத்தறையில் இருந்து வந்தாலும் அவர் ஒட்டுமொத்த இலங்கையருக்குமான அரசியலைச் செய்தார்.



பௌத்த மதத்திற்கு மதிப்பளித்த சமகாலத்தில் ஏனைய மதங்கள் பற்றிய நல்லபிப்பிராயத்தையும் கொண்டிருந்தார். குறிப்பாக இனம் கடந்த பார்வையும் செயற்பாடும் அவரிடம் இருந்தது.




இதுவும் ஒருவகை அரசியல்தான். அத்துடன் அவரிலும் பல விமர்சனங்கள் இல்லாமலில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் முன்மாதிரியான அரசியல் பண்புகளைக் கொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில அரசியல்வாதிகளுள் ஒருவராக மங்கள திகழ்ந்தார்.




தென்னிலங்கையின் மையப் புள்ளியில் இருந்து வந்த அரசியல் தலைவர் என்றாலும் நியாயங்களைப் பேசுவதற்கு மங்கள பின்னின்றதில்லை. தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.



 முஸ்லிம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முயன்றபோது நிதர்சனத்தைப் பேசினார். அதுமட்டுமன்றி ஜனாஸா எரிப்புக்கு எதிரான முன்னெடுப்பில் ஆரம்பத்திலேயே இணைந்து கொண்ட சிங்கள அரசியல்வாதியாவார். 

ஆக மொத்தத்தில் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்புவதுடன் பேதங்கள் கடந்து 'இலங்கையர்' என்ற ஒருகுடையின் கீழ் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடைசிவரையும் கொண்டிருந்த ஒருவராக மங்களவை அடையாளப்படுத்த முடியும்.



இதுதான் அவரது வெற்றிடம் இன்று உணரப்படுவதற்கு பிரதான காரணமாகும். 

கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு அரசியல் அணுகுமுறையையே முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரஃப் கொண்டிருந்தார் என்று சொல்லலாம். முஸ்லிம்களுக்கான அரசியல் தளத்தில் நின்று செயற்பட்டாலும் அவரிடம் இனம் - மதம் கடந்த ஒரு பார்வை இருந்ததை அவரது செயற்பாடுகளை உன்னிப்பாக மீளாய்வு செய்வோரால் அவதானிக்க முடியும்.

ஆரம்பத்தில் பெருந்தேசிய அரசியல் பிரக்ஞையோடு இருந்த அஷ்ரஃப் பின்னர் தமிழர் அரசியலோடு சங்கமித்தார். ஆனால் தமிழர் அரசியலில் கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டு ஆயுதங்கள் முன்கையெடுத்த பிறகு அந்த வழியை விட்டு விலகி தனிவழியில் பயணித்தார்.



அதன்படி முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை அவர் உருவாக்கினார். கிழக்கில் இருந்து கொண்டு கொழும்பையும் ஆட்டுவிக்கும் ஒரு ராஜியத்தை கட்டமைத்தார். 

உரிமை அரசியலிலும் அபிவிருத்தி அரசியலிலும் சமாந்திரமாக அஷ்ரஃப் மேற்கொண்ட சேவைகள் அளப்பரியன. அவருக்குப் பின்னர் வந்த சுமார் 30 முஸ்லிம் எம்.பி.க்களாலும் நான்கைந்து முஸ்லிம் கட்சிகளாலும் கூட்டாக இணைந்து கூட அவர் செய்த அளவுக்கு சேவையை செய்ய முடியாமல் போயிருக்கின்றது என்பதே உண்மையாகும். 

தலைவர் அஷ;ரப் முஸ்லிம் அடையாள அரசியலை இணக்க அரசியலின் ஊடாக மிகச் சரியான முறையில் முன்கொண்டு சென்றார். வெறுமனே பெருந்தேசியத்திற்கு முட்டுக் கொடுக்கும் வேலையை மட்டும் செய்யாமல் பேரம்பேசல்களை சமூகத்திற்காக பயன்படுத்தினார். இதனால் முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று மதிப்பிடுவதற்கான ஒரு அளவுகோலாக இன்றுவரையும் மர்ஹூம் அஷ்ரஃப் இருக்கின்றார்.




இன்றிருக்கின்ற நிலைமைகள் அன்று இருக்கவில்லை. இனவாதம் என்பது இந்தளவுக்கு அரசியல்மயப்படுத்தப்பட்டு இருக்கவும் இல்லை. ஆயினும் கருத்தியல் ரீதியான இனவாத சிந்தனை இதை விடப் பலமாக அப்போது இருந்தது.



அதை மிகச் சாதுர்யமான முறையில் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல இவர் கையாண்டார். சிலபோது பாராளுமன்றத்தில் தொப்பி அணிந்து பேசிய தைரியம் அஷ;ரபுக்கு மட்டுமே உரியது.

முஸ்லிம்களின் பிரச்சினைகள் அபிலாஷகளை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் கண்ணியமான முறையில் முன்வைத்தார்.



பாராளுமன்றிலும் சரி அதற்கு வெளியிலும் சரி கருத்தியல் வேறுபாடுகளை தர்க்க ரீதியான முறையில் எதிர்கொண்ட ஒரேயொரு அரசியல் தலைவராக அஷ;ரபை வரலாறு பதிவு செய்திருக்கின்றது.




காத்திரமான பாராளுமன்ற உரைகளும் சோமதேரர் போன்றோருடனான ஆக்கபூர்வமான விவாதங்களும் இவற்றுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். இவ்வாறு> அஷ்ரஃப்முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலைச் செய்தாலும், ஒருகட்டத்தில் இனம் சமூகம் கடந்த சேவைகளையும் அவர் செய்தார் என்பதை இக்கட்டுரை சுட்டிக்காட்ட விளைகின்றது.




பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கிய அவர், தொழில் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த கணிசமான சிங்கள தமிழ் இளைஞர்களையும் தேடிச் சென்று தொழில் வழங்கினார். இதனால் முஸ்லிம் இளைஞர்களின் தொழிலும் பாதுகாக்கப்பட்டது மட்டுமன்றி நூற்றுக்கணக்கான தமிழ்>

 சிங்களக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்தது. இன்றுவரையும் அவர்கள் அதற்காக நன்றி கூறுகின்றனர். 

ஏனைய சமூகங்களின் உணர்வுகளை மத உரிமைகளை மதிப்பவராக அவர் இருந்தார் எனலாம். ஏனைய சமூக வழிபாட்டுத் தலங்களுக்கு அவர் விஜயம் அக்காலத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் கோவில்கள் விகாரைகளுக்கு பலவிதமான உதவிகளை செய்தார்.



குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள, தமிழ் சமூகத்தின் வழிபாட்டிடங்களுக்கு அவர் செய்த உதவிகளை அந்தந்த சமூகங்களில் உள்ள மூத்தவர்கள் இன்றும் நினைவுகூர்கின்றனர்.



அசித்த பெரேராவுக்கு தேசியப் பட்டியலை வழங்கியது மட்டுமன்றி இஸ்லாமிய விரோத கருத்தியலைக் கொண்டிருந்த சாணக்க அமரதுங்க போன்றோரையும் கையாண்டார்; இதன் உச்சக்கட்ட சிந்தனையாகவே கடைசித் தறுவாயில் அவர் பொது அடையாளத்துடனான தேசிய ஐக்கிய முன்னணி எனும் புதிய கட்சியைத் தோற்றுவித்தார் என்றும் கூறலாம்.  

அந்த வகையில் பெருந்தேசிய அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் முஸ்லிம்களுக்கான அரசியலை முன்கொண்டு சென்ற சமகாலத்தில் இனம் மதம் என்ற பேதங்கள் கடந்த கண்ணோட்டத்தின் ஊடாக ஏனைய சமூகத்தவர்களால் அவரும் முஸ்லிம் சமூகமும் மதிக்கப்படும் நிலையை உருவாக்கினார்.



இந்த விடயத்தில்தான், மங்களவும் அஷ;ரபும் ஒரே தன்மையை வெளிப்படுத்துகின்றனர். 

அஷ்ரஃபின் மரணத்திற்குப் பின்வந் முஸ்லிம் தலைவர்கள் அரசியல்வாதிகள் யாரும் இப்படியான ஒரு அரசியலைக் பின்தொடரவில்லை. சிங்கள தமிழ் அரசியல்வாதிகளிலும் ஓரிருவர் மாத்திரமே இப்பண்புடன் உள்ளனர்.



 எனவே அஷ்ரஃப் மங்களவைப் போல சிந்தித்து செயற்படும் அரசியல்வாதிகள் உருவாக வேண்டியது அவசியமாகும். 


- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 29.08.2021)

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !