கொரோனா என்கின்ற கொள்ளை நோய்...
கொரோனா என்கின்ற கொள்ளை நோய்...
வலி மிகு நெஞ்சத்தோடு இந்தப் பதிவினை இடுகின்றேன்.
பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தினால் பிரிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் தாய் நாட்டுடனும் தாய் மண்ணுடனும் பிரிக்க முடியாத பந்தத்தில் இணைந்து கிடக்கின்ற மனித மனங்களுக்கு மண் என்பதும் நாடு என்பதும் வெறும் கல்லும் மண்ணும் மரமும் ஆறும் கடலும் அல்ல,
அங்கே வாழுகின்ற எமது சொந்தங்களும் பந்தங்களும் தான் எமது தவிப்புக்கும் துயரத்துக்கும் ஆணிவேர். அவர்களை ஒவ்வொருவராக இழந்து கொண்டிருக்கின்றோம்.
ஓரிரு வார கால இடைவெளியில் ‘சென்று வருகின்றேன்’ என்று விடை பெற்று வந்த சகோதரிகள் இருவரை இழந்து நிற்கின்றேன்.
மீண்டும் காணலாம் என்கின்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் வெறும் கானல் நீராகிப் போன வெறுமையுடனும் கனத்த இதயத்துடனும் இந்தப் பதிவு இங்கே வருகின்றது.
இப்படியான நிலைமை பல குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதனை நான் அறிவேன். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
யாரைக் குறை சொல்வதென்று தெரியவில்லை, ஆரம்பத்தில் எல்லோருமே பொடுபோக்காகத்தான் இருந்தார்கள் என்பது ரகசியமல்ல. மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உலகம் விழித்துக் கொண்டது.
வளர்ந்த நாடுகள் தங்களது செல்வங்களை வைத்துத் தங்கள் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்த பொழுது சில நாடுகள் கொள்ளை நோய் ஒன்றை வைத்து அரசியல் லாபம் பெற முயற்சி எடுத்தன.
விஞ்ஞானத்தைப் புறக்கணித்து விளக்கு வைப்பதிலும், டோர்ச் அடிப்பதிலும், தகரங்களைத் தட்டி கொரோனா வை விரட்டுவதிலும் ஈடுபட்டமை மட்டுமல்லாது ஒரு இனக்குழுமத்தின் மீதும் சமூகத்தின் மீதும் அதன் பாரத்தை சுமத்தி அவர்களை சிறைகளில் அடைத்து சின்னா பின்னப்படுத்தினர்.
எமது நாட்டில் இன்னும் பலபடி மேலே சென்று, நோயைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி உடலங்களை எரித்து மக்களின் மனங்களை காயப்படுத்தினர்.
உள்ளூர் பரிகாரியின் பாணியை உட்கொண்டு மக்களுக்கு வழிகாட்டினர். கங்கைகளில் குடங்களை உடைத்துத் தங்கள் அறியாமையையும் அவலத்தையும் பறை சாற்றினர்.
எல்லாமே கையை மீறிச் சென்று விட்டது. ஏனைய நாடுகள் அடுத்த கட்டம் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது, சில நாடுகள் இன்னும் பிணங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
விழித்துக் கொள்வோம் தோழர்களே! எமது உடலும் உயிரும் எமது கையில்தான். நாட்டின் சட்ட திட்டங்களும், நடவடிக்கைகளும் எம்மைக் காக்க வரப் போவதில்லை. எம்மை நாமே காத்துக் கொண்டால் தவிர வேறு எந்த வித உத்தரவாதமுமில்லாத ஒரு கட்டத்தை நாம் அடைந்து இருக்கின்றோம். உள்ளூர் பழமொழி ஒன்று சொல்வார்கள். யானை அடிக்க முன்னர் தானே அடித்துச் செத்த கதையாக மாறி விடாமல், நிரூபிக்கப்படாத ‘வாக்சின்’ மருந்தினால் பிரச்சினை வரலாம் என்கின்ற கட்டுக்கதைகளை நம்பி அருமை உயிரைப் பலிகொடாமல் உடனடியாக நாமாகவே தேடிச் சென்று மருந்தினைப் பெறுவோம்.
சுகாதார வழிமுறைகளைக் கையாளுவோம். எமக்கு நாம் மட்டுமே உதவி. எம்மைக் காப்பதற்கு யாரும் வரப்போவதில்லை என்பதை மனதில் கொள்வோம்.
நோய் வாய்ப்பட்ட பின்னர், வைத்தியசாலைகளில் எம்மவர் அனுபவிக்கின்ற துன்பங்களை நாம் அறிவோம். ஒக்சிஜன் பொருத்தப்பட்ட முக மூடிகளுடன் உயிருக்காகப் போராடும் எம்மைச் சுற்றி எமது அன்புக்குரிய ஒரு முகத்தைக் கூடக் காணமுடியாத அவல நிலை. இறுதி மூச்சை விடும்பொழுது நமது நேசத்துக்குரிய மனைவி, கணவன், குழந்தைகள், சகோதரர்,உற்றார் உறவினர் யாரும் இல்லாத ஓர் அநாதை போன்று நாம் மரணிக்கின்ற தருணத்தை எண்ணிப் பார்ப்போம்.
இறுதிக்கணங்களில் எமது காதுகளில் குர் ஆன் வசனங்களை உச்சரிக்கின்ற எமது அன்புச் செல்வங்களின் குரல்கள் விழப்போவதில்லை. பாங்கின் ஒலியை நாம் கிரகிக்கப் போவதில்லை. எமது காதுகளில் கலிமாவை மொழிவதற்கு யாருமில்லை. வாழும் வரை எல்லா செல்வங்களும் பெற்றிருந்த நமக்கு, எமது ஊரில் எம்மவர் கூடி நின்று எமக்காகக் கையேந்தி, ஒரு துளிக் கண்ணீர் சிந்தி எம்மை வழியனுப்பி வைக்க வழியில்லை. எமது கபுரின் மீது இறுதியாக எமது சொந்தங்களால் பிரார்த்தனையுடன் மலராகச் சொரிகின்ற மூன்று பிடி மண்ணுக்கு வழியில்லை. ஒவ்வொரு வெள்ளியும் எமது அன்புக்குரியவர்கள் எமது கபுர் இருக்கும் இடம் வந்து ஸியாரம் செய்து யாசீன் ஓதி துஆ கேட்பதற்கு வழியில்லை. வலிகள் மட்டுமே சுமந்து நிற்கிறது இந்த மனித சமுதாயம்.
விழித்துக் கொள்வோம். எம்மை நாமே காத்துக் கொள்வோம். ஒரு கொள்ளை நோய் வரும்போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எமது கண்மணி நாயகம் சொல்லியிருக்கின்ற வழிகளை மீட்டிப் பார்ப்போம்.
நோய் இருக்கின்ற ஊருக்கோ, பிரதேசத்துக்கோ செல்லாதீர்கள். உங்களுக்கு நோய் இருக்குமானால் தனிமைப்படுங்கள், காற்றினால் பரவுகின்ற கண்ணுக்குத் தெரியாத கிருமி என்பதனால், தள்ளியிருங்கள், காற்றை வடிகட்டி சுவாசியுங்கள், கைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீண் பிரயாணங்களைத் தவிருங்கள். வெளியில் உணவருந்துவதை விட்டு விடுங்கள். கூடிக் குலாவுவதை ஒத்தி வையுங்கள்.
இவை எவையும் அறிவுரைகளல்ல. ஆழ்ந்த வலியின் வெளிப்பாடுகள். துயரங்கள் தருகின்ற இதயத்தின் குமுறல்கள். எல்லா உயிர்களும் யாரோ ஒருவரது அல்லது பல பேரது பெறுமதி மிக்க உறவு அல்லது ஆணிவேர் என்று கொள்க.
எல்லாம் அறிந்த அல்லாஹ் எம் எல்லோரது சிரமமிக்க இந்த சோதனையில் இருந்து எம்மை மீட்பதற்கு உதவ வேண்டும் எனும் பிரார்தனையோடு
நான்,
Roshan Ismail
வான்கவுவர் - Canada
Comments
Post a Comment