கொங்கொவில் தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலில் 6 பேர் பலி!

 கொங்கொவில் தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலில் 6 பேர் பலி!





கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரமான பெனியில் உணவகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தற்கொலை குண்டுதாரி உணவகக் கட்டத்துக்குள் நுழைய முயன்ற போது பொலிஸார் அவரை இனங்கண்டு தடுத்தனர். இதனால் உணவகத்தின் நுழைவாயிலிலேயே குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் தற்கொலை குண்டுதாரியும் மேலும் ஐவரும் உயிரிழந்தனர்.


ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு தீவிரவாதக் குழுவான ஏ.டி.எப். இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


எனினும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.


வெடிகுண்டு வெடித்த போது உணவகத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது உணவகத்தில் குழந்தைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.


சமீப வாரங்களாக பெனியில் இராணுவத்திற்கும் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன.


ஏ.டி.எப். என்ற தீவிரவாதக் குழுவின் தொடர்ச்சியான மிருகத்தனமான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக கொங்கோ மற்றும் உகாண்டா படைகள் அந்த அமைப்புக்கு எதிரான தீவிர கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.


உகாண்டாவில் தலைநகர் கம்பாலா உட்பட நாட்டில் சமீபத்தில் நடந்த தொடர் தாக்குதல்களின் பின்னணியில் இந்த குழு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


1990 களில் உகாண்டாவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அணுகுமுறையால் அதிருப்தியடைந்தவர்களால் ஏ.டி.எப். எனப்படும் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவைச் சோ்ந்தவர்கள் மேற்கு உகாண்டாவில் இருந்து விரட்டப்பட்டனர். அவர்கள் பலர் எல்லையைத் தாண்டி கொங்கோவுக்குத் தப்பிச் சென்றனர்.


பின்னர் அக்குழு கொங்கோவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. அங்கு இக்குழு மேற்கொண்ட தீவிரவாத தாக்குதல்களால் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


மார்ச் மாதம், ஐ.எஸ். உடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் ஏ.டி.எப். குழுவையும் அமெரிக்கா சேர்த்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !