மிக அரிதான பயணமாக இஸ்ரேல் சென்றார் பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்!

 மிக அரிதான பயணமாக இஸ்ரேல் சென்றார் பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்!



பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுக்கு பயணம் செய்து, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸை சந்தித்தார்.


பாதுகாப்பு மற்றும் சிவில் விவகாரங்கள் குறித்து இதன்போது இருவரும் பேசியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் இஸ்ரேலுக்கான மிக அரிதான பயணங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.


இந்தப் பேச்சுவார்த்தையின் போது பொருளாதார மற்றும் சிவில் விவகாரங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இருவரும் இணங்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியில் பாலஸ்தீனத்துக்கு விஜயம் செய்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்துப் பேசினார்.


பல வருடங்களின் பின்னர் இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே இடம்பெற்ற முதல் உயர்மட்ட உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமைந்திருந்தது.


எனினும் இந்தப் பேச்சுக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், பாலஸ்தீனியர்களுடன் எந்த சமாதான முன்னெடுப்புகளும் நடக்கவில்லை. அது நடக்காது என தெரிவித்தார்.


இதற்கிடையே பென்னி காண்ட்ஸ் - மஹ்மூத் அப்பாஸ் இடையிலான சந்திப்புக்கு இஸ்ரேலிய எதிர்க்கட்சியான லிகுட் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என லிகுட் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடரும் நிலையில் இரு தரப்பு உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக மோசமடைந்துள்ளன.


லிகுட் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு 2009 முதல் 2021 வரை பிரதம மந்திரியாக இருந்தபோது, 2014 இல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூதக் குடியேற்றங்கள் விரிவடைந்தன.


கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்ற இஸ்ரேலின் கூட்டணி அரசின் பிரதமராக பாலஸ்தீனிய அரசமைப்பை எதிர்க்கும் குடியேற்றப் பரப்புரைக் குழுவின் முன்னாள் தலைவரான வலதுசாரி நப்தலி பென்னட் தற்போது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !