மனிதாபிமானமற்ற செயல்..' தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி தெளிப்பு.. ஐகோர்ட் அதிருப்தி
மனிதாபிமானமற்ற செயல்..' தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி தெளிப்பு.. ஐகோர்ட் அதிருப்தி
இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வது தொடர் கதையாகியுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் முறையாக ஒப்புகை சீட்டு பெற்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, 42 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து. அவர்களது விசைப் படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை
கிருமிநாசினி தெளிப்பு. இந்தச் சம்பவம் நடந்து சில மணி நேரங்களில் மேலும் 25க்கும் மேற்பட்ட மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. வெறும் சில மணி நேரத்தில் மொத்தம் 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த சமயத்தில் கொரோனா அச்சம் காரணமாகத் தமிழ மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மீனவர்கள் மீது இலங்கை நாட்டின் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்தது ஏற்புடையதல்ல. இந்திய மீனவர்களைப் பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் கடற்படையினரால் சுடப்பட்டதில் குஜராத் மீனவர் ஒருவர் இறந்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு, பாகிஸ்தான் தூதரை அழைத்து கடுமையாக எச்சரித்தது. ஆனால், தமிழக மீனவர்கள் 68 பேரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு 68 இந்திய மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 2 சிறார்கள் உட்பட 68 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களைச் சரியான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது, அவர்கள் கண்ணியத்துடன் நடத்த இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய அரசு, 68 மீனவர்களும் குடும்பத்தினருடன் தொலைப்பேசி மூலம் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவாக 68 இந்திய மீனவர்களையும் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது
இதை நீதிபதிகள் குறித்துக் கொண்டனர். மேலும், மீனவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் அவர்களைத் தனிமைப்படுத்தி அதன் பின்னர் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் மீனவர்கள் மீது கிருமிநாசினி ஊற்றியது மனிதாபிமானம் இல்லாத செயல் என்று கண்டித்தனர். மேலும், இந்திய மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும்போது அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை மத்திய உறுதிப்படுத்த வேண்டும் என்றனர். பொங்கல் திருநாளுக்கு முன்பாக மீனவர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என நம்புவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
Comments
Post a Comment