எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவது தொடர்பான தகவல் வெளியானது

 

எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவது தொடர்பான தகவல் வெளியானது!



சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களையடுத்து சந்தேகத்துக்கிடமான அரைவாசி பாவித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாவனையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் அது தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளதுடன் அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தேசிய பத்திரிகைகளில் விளம்பரங்களை பிரசுரிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் மக்களுக்கு அதனை தெளிவுபடுத்தும் வகையில் விரிவான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ருவன் பெர்னாண்டோ சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதற்கிணங்க அவ்வாறான அறிவித்தல்களை ஊடகங்கள் மூலம் வெளியிடுவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நீதிமன்றத்திடம் உறுதியளித்துள்ளது.

அரைவாசி பாவிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கு சில சமையல் எரிவாயு விற்பனையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையிலேயே நேற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ‘வினிவித பெரமுன அமைப்பின் செயலாளர் நாகானந்த கொடித்துவக்கு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

அதன்போது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி மனோகர ஜயசிங்க அதுதொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் விளம்பரங்கள் நேற்று ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மனுதாரரான நாகானந்த கொடிதுவக்கு நேற்று நீதிமன்றத்தில் அது தொடர்பில் தெரிவிக்கும்போது, அரைவாசி பாவித்த சந்தேகத்திற்கிடமான சிலிண்டர்களை மீளப் பெற்றுக் கொள்வதில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லயென நுகர்வோர் விவகார அதிகார சபையின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி மனோகர ஜயசிங்க தெரிவித்தார்.

அதற்கான வேலைத் திட்டமொன்றை சமையல் எரிவாயு நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளதாகவும் அதனை நுகர்வோருக்கு தெளிவுபடுத்தும் வகையில் பத்திரிகை விளம்பரங்களை பிரசுரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை அவ்வாறு அரைவாசிக்கு மேற்பட்ட சிலிண்டர்களை எடுக்க மறுக்கும் சமையல் எரிவாயு விற்பனையாளர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !