வாழைச்சேனை பகுதியில் திருட வந்தவர் வயோதிப பெண்ணை கொலை செய்ய முயற்சி!
வாழைச்சேனை பகுதியில் திருட வந்தவர் வயோதிப பெண்ணை கொலை செய்ய முயற்சி!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை விதவைகள், அனாதைகள் ஓய்வூதியம் பெறும் தாய் ஒருவரின் வீட்டில் அவரை கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை எஸ்.எல்.ஹாஜியார் வீதியில் வசித்து வந்த ஓய்வூதியம் பெறும் 70 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த திருடன் குறித்த பெண்ணின் காதினை அறுத்ததுடன், கழுத்தினை நெருக்கியதுடன், சத்தம் போட்ட போது வாயில் அடித்து பல்லினை உடைத்துள்ளார்.
இச்சந்தர்பத்தில் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அத்தாயின் சகோதரியின் மகன் அழுகுறல் சத்தம் கேட்டு சத்தம் எழுப்பிய போது திருடன் தப்பிச்சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக திருடனின் அடையாளங்களை உறவினர்கள் தெரிவித்ததற்கமைய வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் அப்பகுதியிலுள்ள 21 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமுற்ற வயோதிப பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், குறித்த பெண்ணிடம் இருந்த திருடப்பட்ட நகைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு வாழைச்சேனை தபால் நிலைய வீதியில் தூக்கத்தில் இருந்த பெண்ணின் கை பட்டியை அறுத்து திருடிச் சென்றுள்ள சம்பவமும் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவமும், அதனுடன் இணைந்து கொலை முயற்சியும் இடம்பெற்று வருவதால் பிரதேச மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையால் இவ்வாறான கொலையுடன் கூடிய திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப் பொருள் பாவனையால் பலமுறை சிறைச்சாலைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment