மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்டஈட்டுக் காப்புறுதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கிவைப்பு!!

 மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்டஈட்டுக் காப்புறுதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கிவைப்பு!!










கடந்த 2020 மற்றும் 2021 பெரும் போக வேளாண்மைச் செய்கையின்போது வரட்சி, வெள்ளம் மற்றும் காட்டுயானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான

காப்புறுதி வழங்கிவைக்கும் ஆரம்பகட்ட நிகழ்வானது இன்று (28) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் வவுணதீவு மண்டபத்தடி  கமநல சேவை நிலையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.


அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களது சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு பிரகடனத்திற்கு அமைவாக நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் பல்வேறு துறைசார் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் நலன்சார்  பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அதற்கு அமைவாக விவசாயிகளின் நலன் நோன்புகை தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனத்தை செலுத்தி வருகின்ற நிலையில் "விவசாயிகளுக்கு வளமான நாளை" எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பெரும்போக செய்கையின் போது பாதிக்கப்பட்ட சுமார் 9736 விவசாயிகளுக்கு கமத்தொழில் அமைச்சின் வழிகாட்டுதலில், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் சுமார் 36 கோடியே 19 இலட்சம் ரூபாய் நஸ்டஈட்டுக் கொடுப்பனவாக  வழங்கி வைக்கப்படவுள்ளன.


இதற்கமைவாக மட்டக்களப்பு மண்டபத்தடி கமநல சேவை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட சுமார் 217 விவசாயிகளுக்கான கொடுப்பனவிற்கான காசோலைகள் இன்று காலை 10.30 மணியளவில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காசோலையினை வழங்கியிருந்தார்.


இதன்போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டிற்கான காப்புறுதியாக முற்றாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு ஏக்கரிற்கு நாற்பதாயிரம் தொடக்கம் இழப்பீட்டினையும், ஏனைய பகுயளவில் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு பாதிப்பின் வகைக்கேற்ப இழப்பீட்டு காப்புறுதி க்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், காசோலைகளை பெற்றுக்கொண்ட விவசாயிகள் தமக்கான நஸ்ட ஈட்டுக் காப்புறுதியினை மிக விரைவாக பெற்றுக்கொடுத்தமைக்காக இராஜாங்க அமைச்சருக்கும், அரசாங்கத்திற்கும் தமது நன்றியினை தெரிவித்திருந்தனர்.


அதேவேளை இன்றைய  தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை, கரடியனாறு மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய மூன்று  பகுதிகளில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களது பங்கேற்புடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டு காப்புறுதித் தொகைக்கான காசோலைகள்  வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வுகளில் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் பணிப்பாளர் பண்டுக வீரசிங்க, கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் ஹசான் திஸ்ஸநாயக்க, கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.பாஸ்கரன், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், விவசாய காப்புறுதிச்சபையின் மாவட்ட உயரதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !