பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்ககோரி திருமலையிலும் கையெழுத்து வேட்டை
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்ககோரி நேற்று (26) மாலை திருகோணமலையிலும் கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணி ஏற்பாடு செய்த கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை செல்வா உருவ சிலைக்கு முன்பாக குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியினரினால் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டதுடன்
குறித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது - 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே தற்காலிக எமது சட்டப் புத்தகங்களில் காணப்படும் மிக கொடூரமான சட்டமாக காணப்படுவதாகவும்.
1979ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட குறித்த பயங்கரவாத சட்டம் அதன் தலைப்பில் தெரிவிப்பது போல தற்காலிக ஆறு மாத காலத்துக்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது தற்போது 42 வருட காலங்கள் நீடித்து அநீதியை விளைவிக்கும் அநேகருக்கு துன்பங்களையும் கஷ்டங்களையுமே வழங்கியுள்ளதாகவும்
இச் சட்டத்தின் விதிகள் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களுக்கு எதிரான திசையில் இயங்குகின்றதாகவும்
உண்மையில் விசாரணை நிலுவையில் உள்ள குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானமும் கூட எமது சட்டம் காவல்துறையிடம் வழங்கப்படும் எந்த வாக்குமூலத்தையும் கண்டுகொள்வதில்லை.இது நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும்
பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மாத்திரமே விதிவிலக்காக ஒரு உதவி காவல் அதிகாரி பதவிக்கு குறையாத ஒரு காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்குமூலம் குற்ற ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளப்படும். இருந்த போதிலும் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும் இந்த விதி மட்டுமே பல தவறான தீர்ப்புகளுக்கு வழி வகுத்தது மட்டுமல்லாது காவல்துறையின் விசாரணைத் திறனை மழுங்கடித்தது என்பதனை சொல்ல தேவையில்லை.
உண்மையான குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில் ஒரு குறிப்பிட்ட குற்றம் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறுவதற்கும் ஒரு தீர்ப்பினை வலுவாக்க ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்படுவதே போதுமானது என்பதாலும் இது எதிர் விளைவாக வும் நிரூபிக்கப்பட்டுள்ளது என குறித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்.
மேலும் ஒப்புதல் வாக்குமூலங்கள் தடுப்புக் காவல் மற்றும் துணை இல்லாமல் காவலில் வைப்பதற்கான விதிகள் ஆகியவை காவல்துறை சித்திரவதை நிகழ்வுகளை அதிகரிக்க செய்துள்ளதாகவும்
இக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரசுரிக்கப்பட்ட தீர்ப்புகளை அவதானித்தால் இதனை கண்டு கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தர நிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதி அளித்திருந்ததுடன்.
2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறுத்துவதாக ஜனவரி 27ஆம் திகதி அதன் திருத்தத்திற்கான சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நடைமுறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அவைகளிலும் அதைத் தொடர்ந்து வரும் கடுமையான விளைவுகள் இன்னும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது இந்த பின்னணியில் நாம் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்குவதாக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
மதத்தலைவர்கள், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், பிரதேச சபை தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், சிவில் நிறுவனத்தினர் மற்றும் பல பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன்
திருகோணமலை மாவட்ட மரைமாவட்ட ஆயர் பேரருள் திரு நோயல் இம்மானுவேல் ஆண்டகை மற்றும் தென் கயிலை ஆதீன குரு முதல்வர் அவர்களும் குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தமது கையொப்பங்களை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment