ரஷ்யா - உக்ரைன் பேச்சில் முன்னின்ற ரஷ்ய தொழிலதிபருக்கு விஷம் வைக்கப்பட்டதா
ரஷ்யா - உக்ரைன் பேச்சில் முன்னின்ற ரஷ்ய தொழிலதிபருக்கு விஷம் வைக்கப்பட்டதா?
ரஷ்யா - உக்ரைன் இடையிலான பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா? என்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்றுப் பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இந்த அமைதிப் பேச்சில் பங்கேற்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசினார்.
இந்நிலையில், தொழிலதிபர் ரோமன் மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அமெரிக்காவின், 'வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மூவருக்கும் கண்கள் சிவந்து, முகம் மற்றும் கைகளில் தோல் பகுதி உரிய துவங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கிய்வில் நடந்த பேச்சின் போது இவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
சிகிச்சைக்குப் பின்னர் தற்போது அவர்கள் உடல்நிலை தேறி வருவதாகவால் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான பேச்சு வார்த்தைகளை குழப்ப விரும்பிய ரஷ்ய கடும்போக்காளர்களால் இவா்களுக்கு நஞ்சு வைக்கப்பட்டிருக்கலாம்? என சில தரப்புக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
அதேநேரம் சுற்றுச் சூழல் காரணிகளால் மூவரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சில தரப்புக்கள் தகவல்களை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment