அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் குறித்து ரஷ்யா எச்சரிக்கை

 அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் குறித்து ரஷ்யா எச்சரிக்கை



அணு ஆயுதப் போருக்கான கணிசமான அபாயங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்யா, இந்த அபாயத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாங்கள் அணு ஆயுதப் போரை தவிர்க்கவே விரும்புகிறோம். எனினும் உக்ரைன் கிழக்கில் நடைபெறும் போரில் மேற்கத்திய ஆயுதங்களின் குவிப்பு ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அணு ஆயுதப் போருக்கான ஆபத்துகள் கணிசமாக உள்ளன என நேற்று ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறினார்.


அணு ஆயுதப் போருக்கான அபாயங்கள் குறித்துப் பேசி தேவையின்றி அச்சத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால் ஆபத்து தீவிரமாக உள்ளது. நாம் அதை குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் செர்ஜி லாவ்ரோவ் சுட்டிக்காட்டினார்.


இதேவேளை, உக்ரைனை ஆதரிக்கும் உலக நாடுகளை மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டாக அணு ஆயுதப் போர் எச்சரிக்கையை தற்போது ரஷ்யா கையில் எடுத்துள்ளது. இது ரஷ்யாவின் தோல்வியை குறிக்கிறது என செர்ஜி லாவ்ரோவின் நேர்காணலுக்குப் பின்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் தலைநகர் கிய்வ் விஜயம் செய்த அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினர்.


அப்போது, ரஷ்யாவின் அத்துமீறல்கள் மற்றும் உக்ரைனின் எதிர்ப்பு நடவடிக்கை அகியவற்றை பிளிங்கன் மற்றும் லாயிட் ஆஸ்டின் கேட்டறிந்தனர்.


இதையடுத்து போலந்து நாட்டின் எல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அண்டனி பிளிங்கன் மற்றும் லாயிட் ஆஸ்டின் இருவரும், உக்ரைனின் இராணுவ உதவிக்காக அமெரிக்கா 322 மில்லியன் டொலர்கள் வழங்க இருப்பதாக உறுதியளித்தனர்.


மேலும் உக்ரைனின் இராணுவ உதவிகளுக்கு கூடுதலாக 400 மில்லியன் டொலர்களை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள 15 நாடுகள் இணைந்து வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.


இது ரஷ்யாவை மேலும் ஆத்திரமூட்டிய நிலையிலேயே அணு ஆயுதப் போருக்கான ஆபத்தை குறித்து மதிப்பிட முடியாதென்ற எச்சரிக்கை ரஷ்யாவிடம் இருந்து வெளியாகியுள்ளது.


1945 க்குப் பிறகு ஒரு ஐரோப்பிய நாடொன்றின் மீதான மிகப்பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரண்டு மாதப் படையெடுப்பு அமைந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். பல உக்ரைன் நகரங்கள் ரஷ்ய தாக்குதல்களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மேலும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


எனினும் மரியுபோல் தவிர பெரிய நகரங்களை ரஷ்யாவால் இதுவரை கைப்பற்ற முடியவில்லை. உக்ரேனியப் படைகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுவரும் ரஷ்யப் படைகள், தலைநகர் கிய்வ் புறநகரில் இருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


தலைநகர் கிய்வை கைப்பற்றும் முயற்சி வெற்றியளிக்காததை அடுத்து கடந்த வாரம் டான்பாஸ் எனப்படும் கிழக்கு மாகாணங்களைக் கைப்பற்றும் முயற்சியுடன் ரஷ்யா பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இது வெற்றியடைந்தால் கிழக்கில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுடன் 2014 ஆம் ஆண்டு கைப்பற்றிய சிரிமியா தீபகற்பத்தை இணைப்பதற்கான வழி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !