சூடானிலிருந்து வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்!
சூடானிலிருந்து வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்!
சூடானில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் பாதுகாப்பாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் சனிக்கிழமை (29) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சூடானிலிருந்து வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவர்களை வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சிசிர சேனவிரத்ன வரவேற்றார்.
வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்பு மற்றும் சவூதி அரேபியா அரசாங்கத்தின் தாராளமான உதவியினால் அவர்களது வெளியேற்றம் எளிதாக்கப்பட்டது.
ரியாத் மற்றும் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் ஜெட்டாவில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை சவூதி அரேபிய, இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் இணைந்து கார்ட்டூமில் வசிக்கும் இலங்கையர்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளன.
நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவையும் இலங்கையர்களை வெளியேற்றும் பணியில் உதவிகளை வழங்கியுள்ளன.
சூடானின் நிலைமையை வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், இன்னும் அங்கு சிக்கியிருக்கும் இலங்கை பிரஜைகளால் நாடு திரும்புவதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டால், அவர்களுக்கு உதவ தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment