3 மாத சிசுவின் புகைப்படத்துடன் தீராத நோயைக் குணப்படுத்த,சத்திரசிகிச்சைக்கு பணம் சேகரித்த தாய், தாயின் சகோதரன் கைது..!

 3 மாத சிசுவின் புகைப்படத்துடன் தீராத நோயைக் குணப்படுத்த,சத்திரசிகிச்சைக்கு பணம் சேகரித்த தாய், தாயின் சகோதரன் கைது..!


குறிப்பிட்ட பிள்ளைக்கு இப்போது 8 வயது - பாடசாலைக்கும் செல்கிறது..!


3 மாத சிசுவின் தீராத நோயைக் குணப்படுத்த சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, 


நிதியுதவிகளை திரட்டிக்கொண்டிருந்த பெண்ணொருவர் உட்பட மூவர் கினிகத்ஹேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போலியான ஆவணங்களை தயாரித்து நிதியை திரட்டிக் கொண்டிருந்தபோதே, கினிகத்ஹேன பொலிஸாரால் இவர்கள், புதன்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.  


சந்தேகநபரான பெண், பெண்ணின் சகோதரர் மற்றும் வாடகை அடிப்படையில் அழைத்து வரப்பட்ட நபர் ஆகியோர், முச்சக்கரவண்டியில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி கினிகத்ஹேன நகரத்தில் நிதி திரட்டி கொண்டிருந்தனர்.  


இது தொடர்பில் சந்தேகமடைந்த கினிகத்ஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அவர்களை அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். 


சந்தேகநபரான பெண்ணின் கணவன், சட்ட ரீதியில் அப்பெண்ணிடமிருந்து விவகாரத்து பெற்றுள்ளார். அதன்பின்னரே இவ்வாறு நிதித் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அப்பெண் தெரிவித்துள்ளார். 


படத்தில் இருக்கும் குழந்தை, சந்தேகநபரான பெண்ணின் குழந்தை என்றும் அக்குழந்தை சிறு வயதில் இருந்த நோயின்போது எடுக்கப்பட்ட படம் எனவும் தெரியவந்துள்ளது. 


எனினும், தற்போது அக்குழந்தைக்கு 8 வயதாகின்றது. பாடசாலைக்கும் செல்கின்றார். குறித்த சிறுமி, தன்னுடைய தந்தையின் பொறுப்பின் கீழ் தற்போது இருக்கின்றார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. 


நாடளாவிய ரீதியில் பிரதான நகரங்களுக்குச் சென்று, அந்த நகரங்களுக்கு அண்மையில் இருக்கும் நகரத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வாடகை அடிப்படையில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி, 


அதில் சிசுவின் புகைப்படத்தை ஒட்டி,  நிதி திரட்டப்படுகின்றது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட 29 வயதான அந்தப் பெண், வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அப்பெண்ணின் சகோதரனுக்கு 28 வயது என்றும் அந்தப் பெண், தன்னுடைய சகோதரியுடன் நாடளாவிய ரீதியில் சென்று நிதித்திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.  


மற்றைய நபர், மூதூர் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதானவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக  ண்டறியப்பட்டுள்ளது.  


சந்தேகநபரான பெண்ணின் வங்கி கணக்கில் ஒரு இலட்சத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளது. 


அதுவும் யாழ்ப்பாணத்தில் வைத்து பல சந்தர்ப்பங்களில் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த கினிகத்ஹேன பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !