மீனவர்களை அவதானமாகச் செயற்படுமாறு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் !
மீனவர்களை அவதானமாகச் செயற்படுமாறு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் !
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ரிமால் புயல் பங்களாதேஷை நோக்கி நகர்ந்துள்ளது. இது நாட்டின் கடற்பிராந்தியத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக காங்சேகன்துறையில் இருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.
களனிகங்கை, களுகங்கை மற்றும் நில்வளா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் குறித்த பகுதிகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குக்குலே கங்கை அனல்மின் நிலைய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் வினாடிக்கு சுமார் 80 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Comments
Post a Comment