தீர்வை வரிக்குறைப்பைப் பெறுவதற்கு எட்டப்பட்ட உடன்படிக்கைகள் என்ன? - அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் - நாமல் !

 

தீர்வை வரிக்குறைப்பைப் பெறுவதற்கு எட்டப்பட்ட உடன்படிக்கைகள் என்ன? - அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் - நாமல் !


அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கான தீர்வை வரி 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இருப்பினும் இந்த வரிக்குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கத்துடன் எட்டப்பட்ட வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பான விபரங்களை அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் நாமல் ராஜபக்ஷ, அதில் மேலும் கூறியிருப்பதாவது;

அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கான தீர்வை வரி வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைப்போன்று 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

இவ்விடயத்தில் அமெரிக்க வர்த்தகத்துறைப் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பாராட்டுகின்றேன்.

இருப்பினும் இந்த வரிக்குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கத்துடன் எட்டப்பட்ட வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும்.

எமது நாட்டின் ஏற்றுமதியாளர்கள் நிவாரணத்தைப் பெறுவதையும், உலகளாவிய சந்தைப்போட்டிக்கு செயற்திறன்மிக்கவகையில் முகங்கொடுப்பதையும் உறுதிப்படுத்தும் அதேவேளை, சர்வதேச தரப்புக்களுடன் எட்டப்படும் சகல உடன்படிக்கைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதையும், அவற்றின் விளைவாக நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படாதிருப்பதையும் உறுதிப்படுத்தவேண்டியது அவசியமாகும்.

எனவே அமெரிக்காவுடன் எட்டப்பட்ட உடன்படிக்கைகள் பற்றிய விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !