கஜேந்திரகுமார் தரப்பு ஐ.நா.கடித்தில் கையெழுத்திடப்போவதில்லை - இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு !

 

கஜேந்திரகுமார் தரப்பு ஐ.நா.கடித்தில் கையெழுத்திடப்போவதில்லை - இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு !


தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதற்குத் தீர்மானித்து, அதனை அவர்களாகத் தயாரித்துவிட்டு, கையெழுத்துக்கோரி எமது மேசையில் வைத்திருக்கும் கடிதத்தில் கையெழுத்திடுவதில்லை என்று நாம் தீர்மானித்திருக்கிறோம் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களைக் கையாள்வதற்கான குழுவின் கூட்டம் சனிக்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்,துரைராசா ரவிகரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையசரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் அமைச்சர் கே.துரைராஜசிங்கம், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச்செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கட்சியின் உயர்மட்டக்கூட்டங்கள் இன்னமும் சீராக நடத்தப்படாத நிலையில், கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்துவதற்கு முன்னதாக உடனடியாகக் கையாளப்படவேண்டிய சில விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நேற்று கட்சியின் அரசியல் குழுவும், அரசியல் தீர்வு விவகாரம் குறித்து ஆராய்வதற்கான குழுவும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்திக்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உள்ளூராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. எமது கட்சி வட, கிழக்கு மாகாணங்களில் 58 உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிட்டது. அவற்றில் 10 - 12 சபைகளில் தமிழ்மக்கள் பெரும்பான்மையாக இல்லை. எனவே தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள சுமார் 45 சபைகளில் 32 சபைகளில் எமது கட்சி நிர்வாகங்களை அமைத்திருக்கிறது. நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தரப்பான தேசிய மக்கள் சக்திக்கு அடுத்ததாக அதிகூடிய சபைகளில் நிர்வாகங்களை அமைத்த கட்சியாக தமிழரசுக்கட்சி இருக்கிறது.

கடந்தகாலங்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாகப் போட்டியிட்டுப் பெற்ற ஆசனங்களை விட, இம்முறை தமிழரசுக்கட்சி அதிக எண்ணிக்கையான ஆசனங்களை வென்றிருக்கிறது. அதேவேளை சில சபைகளில் எமது கட்சி பின்னடைந்திருக்கிறது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு சபையிலும் தமிழரசுக்கட்சி நிர்வாகம் அமைக்கவில்லை. யாழ்ப்பாணம் வலி வடக்கில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் விளைவாக எம்மால் நிர்வாகத்தை அமைக்கமுடியாமல் கைநழுவிப்போயிருக்கிறது.

அதன்படி இந்த உள்ளூராட்சிமன்ற நிர்வாகத்தில் எமது கட்சிக்குப் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து எமது கட்சியின் சார்பில் சபைகளுக்குப் பொறுப்பாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்போர், உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் போட்டியிட்டோர் உள்ளிட்ட சகலருக்கும் மக்களுக்கான சேவை வழங்கல் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கிறோம்.

அதேபோன்று அரசியல் தீர்வு விடயத்தில் மாகாணசபைத்தேர்தல் குறித்துக் கலந்துரையாடினோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடத்துதல் என்பன தொடர்பில் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும். அதுவரை மாகாணசபைகள் இயங்கவேண்டும்.

எனவே தற்போது இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான தனிநபர் பிரேரணையை உடனடியாக நிறைவேற்றி, மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம் வழங்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற விடயத்தையும் தொடர்ந்து வலியுறுத்துவதுடன், ஆரம்பத்தில் அச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது அதற்கு மாற்றீடாகப் பிறிதொரு சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் பேசிவருவதை முழுமையாக எதிர்க்கிறோம். பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக எந்தவொரு சட்டமும் தேவையில்லை.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டுவரப்படல், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் என்பன பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடினோம். இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பது குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அண்மையில் தீர்மானம் மேற்கொண்டதுடன், அதில் சில சிவில் அமைப்புக்களும் இணைந்திருந்தன. நாம் அந்தக்கூட்டத்தில் பங்கொள்ளவில்லை.

அந்தக் கூட்டத்தில் அவர்கள் ஐ.நாவுக்கு அனுப்பிவைப்பதற்கான கடிதமொன்றைத் தயாரித்திருக்கிறார்கள். அதனை பதில் தலைவருக்கும், எனக்கும் அனுப்பிவைத்தார்கள். அதுபற்றி சகலருடனும் கலந்துரையாடித் தீர்மானிப்பதாகக் கூறிய பின்னரும், அவர்கள் அக்கடிதத்தை எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பி, அவர்களது கையொப்பத்தைக் கோரியிருக்கிறார்கள்.

இருப்பினும் இவ்விடயத்தில் கட்சித்தீர்மானத்தின் பிரகாரமே செயற்படமுடியும் என்றும், தனியாகக் கையொப்பம் இடமுடியாது என்றும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். இவ்விடயம் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் பேசினோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ்மக்கள் தொடர்பில் எவ்வாறான தீர்மானங்கள் கொண்டுவரப்படவேண்டும், என்ன செய்யவேண்டும் என்பது பற்றி நாம் பலமுறை அவர்களுக்குக் கூறியிருக்கிறோம். அதன்படி அவர்களிடம் என்ன விடயங்களைச் சொல்லவேண்டும், அதனை எப்படிச் சொல்லவேண்டும் என்பது பற்றிக் கலந்துரையாடியிருக்கிறோம்.

எனவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினர் அவர்களாகத் தயாரித்துவிட்டு எமது மேசையில் வைத்திருக்கும் கடிதத்தில் நாம் கையெழுத்திடுவதில்லை எனத் தீர்மானித்திருக்கிறோம். மாறாக நாங்கள் அதனைவிடத் தீர்க்கமாகப் பல்வேறு விடயங்களை ஆராய்ந்து, உரிய விடயங்களை, சரியான தருணத்தில், ஏதேனுமொரு விதத்தில் வெளிப்படுத்துவோம் என்றார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021